க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு முழு நேர அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியை மேலும் 25 பள்ளிகளில் பணி புரிந்து 13 மாதங்களில் ரூ.1 கோடி வருமானம் பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) என்னும் பெயரில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.   ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மண்டலங்களுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன.   இங்கு முழு நேர ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் சுமார் ரூ.30000 ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் சொந்த விவரங்கள் அடங்கிய டிஜிடல் டேடா பேஸ் ஒன்று அமைக்கப்பட்டது.  அதைப் பரிசீலித்த போது அனாமிகா சுக்லா என்னும் பெயருடைய ஆசிரியை சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரே சொந்த விவரங்களுடன் பணி புரிவது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் ரேபரேலியில் உள்ள கேஜிபிவி பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார்.  அதன் பிறகு ஒவ்வொரு பள்ளியிலும் இவ்ர் பணி புரிந்து கடந்த 13 மாதங்களில் இவர் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஊதியம் பெற்றுள்ளார்.    இதுவரை ஆறு மாவட்டப் பள்ளிகளில் அவருடைய பெயர் முழு நேர ஆசிரியையாக காணப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைக்காக ஆஜராகும்படி அனாமிகா சுக்லாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அவர் ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.  மேலும்  அவர் தற்போது எங்குள்ளார் என்பதும் கண்டுபிடிக்க முடியவில்லை.  தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள இந்த ஆசிரியை பற்றிய மேலும் விவரங்களை அரசு சேகரித்து வருகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரன் ஆனந்த், “ஆன்லைன் மற்றும் விரல் அடையாளம் மூலம் வருகைப்பதிவு நடைபெறும் வேளையில் ஒரு ஆசிரியை எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் வருகைப் பதிவு செய்தார் என்பது வியப்பாக உள்ளது.   எனவே இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு காரணமாக அவருடைய விவரங்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.  எனவே அவை கிடைத்ததும் அவர் மீது வழக்குப் பதியப்பட உள்ளது.    அவர் முதலில் ரேபரேலியில் தான் நியமிக்கப்பட்டாரா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.  அதற்கு முன்பும் அவர் வேறு எங்காவது பணி புரிந்திருக்கலாம் என்னும் சந்தேகத்திலும் விசாரணை நடைபெறுகிறது” என அறிவித்துள்ளார்.