பரிட்சையில் காப்பி அடித்தால் பாதுகாப்பு சட்டம் பாயும்

லக்னோ

தேர்வில் முறைகேடு செய்வோர் மற்றும் அதற்கு உதவி செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் தேர்வுகளில் பார்த்து எழுதுவது, அதற்கு உதவுவது, பெற்றோர்களே மாணவர்கள் பார்த்து எழுத உதவுவது போன்ற முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க உத்திரப் பிரதேச அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆரம்பக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை துணை முதல்வர் தினேஷ் சர்மா கவனித்து வருகிறார். நேற்று உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா செய்தியாளர்களிடம், “மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடு செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால்நன்கு படிக்கும் மாணவர்கள் மிகவும்பாதிப்பு அடைகின்றனர். ஆகவே அரசு இந்த முறை மிகவும் கண்டிப்புடன் இயங்க தீர்மானித்துளது.

பாஜக அரசு மாணவர்கள் முறைகேடுகள் செய்வதை தடுப்பதுடன் கல்வியின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைஎடுத்து வருகிறது. தேர்வில் முறைகேடுகள் செய்வதையும் முறைகேடுகளுக்கு உதவுவதையும் ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்ற வருடம் இது போல 67 பேர் பிடிபட்டுள்ளனர்.

ஆள் மாற்றி தேர்வு எழுதுவதை தடுக்க ஒரு சில தேர்வு மையாங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சில முக்கிய தேர்வு மையங்களில் இது போல முறைகேடு நடக்கும் என அஞ்சப்படுவதால் அங்கு ஆதார் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தேகத்துக்குரிய தேர்வு மையங்களின் பட்டியலை ஏற்கனவே அரசு தயாரித்துள்ளது.

நடைபெற உள்ள தேர்வுகளில் காப்பி அடிப்போர், விடைத்தாள்களை மாற்றுவோர். கேள்வித்தாள்களை வெளியிடுவோர், மாணவர்களை மொத்தமாக காப்பி அடிக்க அனுமதிப்போர் உள்ளிட்ட அனைவரையும் கண்டு பிடிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி