கம்சன் வதம் திருவிழா : பாதை மாற்றிய பாஜக எம் பி யால் பதட்டம்

வுதாகா,  உத்திரப் பிரதேசம்

ம்சன் வதம் திருவிழா ஊர்வலத்தின் வழக்கமான பாதையை பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மாற்றியதால் உபி மாநிலத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள மவுதாலா நகரில் கம்சனை ஸ்ரீ கிருஷ்ணர்  வதம் செய்த நிகழ்வு திருவிழாவாக வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.   ஸ்ரீகிருஷ்ணன் தனது தாய் மாமனான கம்சன் அடாத செயல்கள் செய்ததால்  அழித்த தினமான கம்ச வத தினத்தை முன்னிட்டு 114 வருடங்களாக நகரில் ஊர்வலம் நடத்த படுகிறது.

இந்த ஊர்வலம் விழா ஆரம்பித்த நாளில் இருந்தே ஒரு குறிப்பிட்ட பாதையில் நடைபெற்று வருகிறது.  இந்த வருடம் பாஜக பாராளுமன்ற  உறுப்பினரான புஷ்பேந்திர சிங் சாந்தல் தலைமையில் ஊர்வலம் தொடங்க இருந்தது.   அப்போது புஷ்பேந்திர சிங் சாந்தல் வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்ல முயன்றுள்ளார்.   இதை காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இதனால் அங்கு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.   கலவரத்தை அடக்க காவல்துறையின் பல பிரிவினரும் வரவழைக்கப்பட்டு தற்போது நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆங்காங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  நகரே வெறிச்சோடிப் போய் உள்ளது.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த ஊர்வலம் தொடங்கியது முதலே ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டுமே சென்று வருகிறது.   ஆனால் சாந்தல் மற்றும் இந்து யுவ வாகினி அமைப்பை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் ஊர்வல பாதையை மாற்றி இஸ்லாமியர்கள் உள்ள பகுதிக்கு செல்ல முயன்றனர்.

அதை நாங்கள் தடுத்ததால் எங்கள் மீது  அவர்கள் தாக்குதல் நடத்தினர்.   இதனால் ஆறு காவலர் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.   அங்கு அப்போது இருந்த சாந்தல் வன்முறையை தடுக்க எந்த முயற்சியும்செய்யவில்லை.  அவருடைய இந்த பொறுப்பற்ற தன்மையால் தற்போது நகரத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது” என வருத்தத்துடன் தெரிவித்தார்.