சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்தி வரும் மாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுவர்ணா ராஜூக்கு ரெயிலில் மேல் படுக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் ரெயிலில் தரையில் படுத்து உறங்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் டேபிள் டென்னிஸில் பல வெற்றிகளை ஈட்டியவர் சுவர்ணா ராஜ். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட அவர் சக்கர நாற்காலியில் தான் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இவர் நேற்றிரவு நாக்பூர்-புதுடெல்லி கரீப் ராத் விரைவு ரெயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறியுள்ளார். அங்கு அவருக்கு மேல் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ந்தார்.

இதனையடுத்து படுக்கையை மாற்றித்தருமாறு அவர் டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டார். கீழ்ப் படுக்கை கொடுக்குமாறு இவர் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் அவர் தரையில் படுத்து தூங்கினார்.

இது குறித்து சுவர்ணா ராஜ் கூறுகையில், ‘‘ “10 முறைக்கு மேல் டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டேன். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. டிக்கெட்டை பரிசோதனை செய்யக்கூட யாரும் வரவில்லை. ரெயில்வே அமைச்சர் பிரபு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்ய வேண்டும் அப்பொது தான் உண்மை உணர முடியும்” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு ரெயில்வே அமைச்கம் உத்தரவிட்டுள்ளது.