சட்டசபை அமளி: திமுக எம்எல்ஏ.,க்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ்! பதவி பறிக்கப்படுமா?

சென்னை:

டப்பாடி அரசின் நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பு நடைபெற்ற கூட்டம் அன்று சட்டசபையில் நடைபெற்ற அமளி குறித்து, திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக, அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. ஒரு அணி சசிகலா தலைமையில்  ‘சசி அதிமுக’ அணி என்றும், மற்றொரு அணி ‘ஓபிஎஸ் அணி’ யாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதையடுத்து அவரை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து  .கடந்த மாதம் 18 ம் தேதி இடைப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

அப்போது ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனக்கூறி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதன் காரணமாக  எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவை காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தனது சட்டை கிழிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் கூறினார்.

இதுகுறித்து சசிஅணியை சேர்ந்த பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவான வெற்றிவேல் சபாநாயகர்,  ,தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அவை விதிகளை மீறியதாகவும், அவர்கள் மீது அவை உரிமைக்குழு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் கூறினார்.

இந்த புகார் மனு உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,   நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்து கொண்ட விதம் பற்றி பதிலளிக்கும்படி தி.முக..,எம்.எல்.ஏ.,க்கள் 7 பேருக்கு அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி வைத்தது.

எம்.எல்.ஏ.,க்கள் கு.க.செல்வம், மஸ்தான், ரவிச்சந்திரன், முருகன், அம்பேத்குமார், கார்த்திகேயன், சுரேஷ்குமார் ஆகியோருக்கு, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களது பதவியை பறிக்க சபாநாயகர் முடிவெடுத்துள்ளதாக சட்டசபை வளாக தகவல்கள் கூறுகிறது.

சபாநாயகர் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கும் வேளையில், திமுக உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English Summary
Uproar in Tamilnadu assembly regarding Rights Committee of Legislative notice to DMK MLA's!