கிருஷ்ணர் பற்றிய கருத்து: மன்னிப்புக் கேட்டார் பிரசாந்த் பூஷண்

டில்லி,

கிருஷ்ணர் பற்றி தான் வெளியிட்ட கருத்துக்காக, பிரபல வழக்கறிஞர்  பிரசாந்த் பூ‌ஷண், மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

உத்தரபிரதேசத்தில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஆதித்யநாத், ஈவ்–டீசிங்கில் ஈடுபடுவோரை கைது செய்ய சிறப்புக் காவலர்களை நியமித்துள்ளார்.  இதற்கு உத்தரபிரதேசத்தில் பெண்கள் மத்தியிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷண். இவரது மகனும், ஆம் ஆத்மி கட்சியில் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.

‘ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தார். பகவான் கிருஷ்ணர்தான் புகழ்பெற்ற ஈவ் டீசர். சிறப்புப் படையினரை ‘கிருஷ்ணா எதிர்ப்பு படை’ என அழைக்க,  ஆதித்யநாத்துக்கு தைரியம் இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டில்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் தேஜிந்தர் பால், கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை பிரசாந்த் பூஷன் புண்படுத்திவிட்டார் என டில்லி போலீசிலும், உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜீ‌ஷன் ஹைதர், லக்னோ போலீசிலும் தனித்தனியாக புகார் செய்தனர்.

எதிர்ப்பு அதிகமானதை அடுத்து, சர்ச்சைக்குரிய கருத்தை பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டரில் இருந்து நீக்கினார். தனது டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.