டில்லி

த்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது.

 

பிரதீப் சிங்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு (2019ம் ஆண்டு)க்கான 829 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிடப்பட்டது.

கடந்த அண்டு ஜூன் 2 ஆம் தேதி அன்று முதல் நிலை தேர்வு நடந்தது. இத்தேர்வை 5.50 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவு ஜூலை 12ம் தேதி வெளியிடப்பட்டது.   இந்த தேர்வில் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. தொடர்ந்து  ஜனவரி 14ம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 2,304 பேருக்கான நேர்முகத் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்றது.

நேற்று நேர்காணல் முடிந்ததைத் தொடர்ந்து, இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in ல் வெளியிட்டது. அகில இந்திய அளவில் 829 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் பிரதீப் சிங் முதலிடத்தையும், ஜடின் கிஷோர் 2வது இடத்தையும், பிரதிபா வர்மா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதலிடம் பெற்ற பிரதீப் சிங், அரியானா மாநிலம், சோனிபட் பகுதியை சேர்ந்தவர். இவர், கடந்த 2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியானார். பிரதீப் சிங்கின் தந்தை விவசாயி ஆவார்.

தமிழகத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7வது இடமும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த பூர்ண சுந்தரி என்ற மாணவி 286வது இடத்தையும், சென்னை பெரம்பூரை பாலநாகேந்திரன் என்ற மாணவர் 659வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் 100 சதவீதம் கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆவர்.

தேர்ச்சி பெற்றவர் ரேங்க் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது குறித்து இன்னும் ஒன்றரை  மாதத்தில் அறிவிக்கப்படும். அதன் பிறகு முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.