டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. அதற்கு தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இப்போது 4வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக சில விலக்குகள் அறிவிக்கப்பட்டன. வரும் மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள மாநில அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி இதர தேர்வுக்கான புதிய தேதியும் ஜூன் 5ல் அறிவிக்கப்படும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.