யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

--

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது. ஆனால், கொரோனா மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக மத்திய அரசும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  விசாரணையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதால் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று கூறியது.

இந்த வழக்கில் பிரமாணபத்திரம் ஒன்றையும் யுபிஎஸ்சி இன்று தாக்கல் செய்தது. அதில் தேர்வு ஏற்பாடுகளுக்காக 50 கோடியே 39 ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாகவும், தேர்வை ஒத்தி வைப்பது கருவூலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை உச்சநீதி மன்றம் நிராகரித்துள்ளது. தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என்று யுபிஎஸ்சி நிர்வாகம் கூறியதை ஏற்பதாகவும் நீதிபதிகள் தமது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.