“குப்பைத்தொட்டி” – உறவுகள் – கவிதை பகுதி 3

 

உறவுகள் – கவிதை பகுதி 3

குப்பைத்தொட்டி

பா. தேவிமயில் குமார்

 

 

உன்னுள்ளே

இருள் சூழ

இருந்தாலும்

இன்பமாகவே

இருந்தேன் !

 

வெளிச்சத்திற்கு

வந்தவுடன்

வேதனையை

அனுபவிக்கிறேனம்மா !

 

அம்மா,

உணர்வுகளற்று விட்டதா

உனக்கு ?

இல்லை

மகளென்றுத் தெரிந்ததால்

மனமற்று விட்டதா ?

 

இல்லை,

ஊர் பேசும்

என்பதற்காக

உன்னை காப்பாற்றிக்கொள்ள

என்னை  இங்கு

கொட்டி விட்டாயா ?

 

வசதியையும்

வாழ்க்கையையும்,

தேடிக் கொண்டும்,

தேவைகளை

பெருக்கிக்கொண்டும்

போகும்,

இந்த சமூகத்திற்கு

இன்று மட்டுமல்ல

என்றுமே,

நம் குரல் கேட்காதம்மா !

 

பிறந்தவுடன்

பெட்டியில்

பயணம் செய்தவன்

பின்னாளில்

கர்ணன் ஆனான்,

 

பிறந்தவுடன், ஒருவன்

கோகுலத்திற்கு

கோமகனானான்,

ஆனால்…..

எனக்கு மட்டும்

“அனாதை” என்ற

பெயர் சூட்டப்படுமே

அம்மா !

 

பிள்ளைக்கு

ஏங்கும்

பெற்றவர்கள்

உலகில் உண்டு,

ஆனால்…..

பெற்றவர்க்கு

ஏங்கும்

பிள்ளைகளின்

பாசத்தை யாரறிவார் ?

 

மகனின்

ஏக்கத்தால்

தவித்த

தசரத மகாராஜனை

பாடிய சமூகமே,

பெற்றவளின்

பாசத்திற்கு

ஏங்கும்

பிள்ளையின் தவிப்பையும்

புரிந்து கொள்ளுங்கள் !

 

வாழ வழியில்லாமல்

எச்சில் இலை

போடும் இடத்தில்

போட்டாயோ ?

 

இல்லை,

இந்த பாரம்

இனியும் வேண்டாம்

என எண்ணி

தூர தூக்கியெறிந்தாயோ ?

தாயே !

 

அதனால் தான்,

தொப்புள் கொடி

தொடர்பு முடியும்போது

குப்பைத் தொட்டிக்கு

கொண்டு வந்தாயோ ?

 

தொட்டில், 

கட்டி தூங்க வைக்கவில்லை,

கட்டில் மேல்

கிடத்தவில்லை,

தாலாட்டு பாடவில்லை

தலைகோதி விடவில்லை

ஆனால்,

அதற்குள்,

அனாதைப் பட்டியலில்

இணைத்து விட்டாயே தாயே !

 

பிறந்தவுடன்

இனிப்பைப்

பரிமாறும்

சமுதாயத்தில்

நாமிருவரும்

நமக்குள்ளே

இழப்பைப்

பரிமாறிக் கொள்கிறோம்

 

உனக்குள் என்னை

உணரவில்லையா ?

பால் சுரக்கவில்லையா ?

பாசம் பிறக்கவில்லையா ?

பெற்ற தாயே !

 

உனக்கு என்னை

தெரியவில்லை,

ஆனால்

இங்கு உணவு

தேட வரும்

உயிரினங்கள்

என்னை,

“ஊன்”

என நினைத்து

உண்ணப் போகின்றன !

 

எறும்புகளும்,

ஈக்களும்

என்னை

ஏந்தும் முன்பாக

நீ வந்து

என்னை

ஏந்திக்கொள்ளம்மா,

நெஞ்சில்

சாய்த்துக் கொள்ளம்மா,

 

வருவாயா அம்மா ?

இல்லை,

வேறு நல் உள்ளம்

என்னை நாடி

வருவார்களா ?

 

அல்லது

யாருமில்லாத,

அனாதையான,

ஆதரவில்லாத

என்ற

அடைமொழிகளுடன்

என்

எதிர்காலம் செல்லுமா ?

 

என்ன பதிலம்மா ?

என்னைத் தேடி

வந்து விடம்மா,

விழிகள் திறக்காமல்

இருந்தாலும்,

உன்னை மட்டுமே

உறவெனத் தேடுகிறேன்

வந்து விடம்மா

 

இப்படிக்கு

இன்று பிறந்த

பச்சிளம் குழந்தை