இஸ்லாமிய அமைப்புகளின் முற்றுகை போராட்டம் தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

சென்னை:

சிஏஏ-வுக்கு எதிராக நாளை சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  முற்றுகை போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை  அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாளை (பிப்.19) சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘குடியுரிமை சட்டத்துக்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தில் திட்டமிட்டு அதிகமாக குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் தற்போது நடைபெற்று வரும், போராட்டங்களினால், பொதுமக்களின் அன்றாட இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், பிப்.19-ல் சட்டப்பேரவையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே வண்ணாரப்பேட்டையில் தேவையில்லாத அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளித்தால் அது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்’ என  கூறி உள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மனுதாரர் சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள், ”இதுதொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டு முறைப்படி பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றனர். அதைத்தொடர்ந்து மனுவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.