வாஷிங்டன்

பிரபல செய்தி ஊடகமான சி என் என் நடத்திய கணக்கெடுப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 14.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 85197 ஐ எட்டி உள்ளது.  இதுவரை சுமார் 3.10 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.   தற்போதைய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை சுமார் 10.34 லட்சம் பேர் ஆக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த மக்களின் கருத்துக்கள் தொடர்பான கணக்கெடுப்பைப் பிரபல செய்தி ஊடகமான சி என் என் தொடர்ந்து நடத்தி வருகிறது.  அதில் சுமார் 54% அமெரிக்கர்கள் தங்கள் அரசின் கொரோனா பரவுதல் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 17% பேர் இந்த கருத்தைத் தெரிவித்த நிலையில் தற்போது 54% பேர் தெரிவித்துள்ளனர்.

பல அமெரிக்கர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரே மாதத்தில் இரு மடங்காகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளன்ர்.  அத்துடன் பலர் இறப்பு விகிதம் அதிகரிப்பதை அரசு கவனத்தில் கொண்டு அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.   இந்த கருத்துக்குச்  சென்ற மாதத்தை விட தற்போது மிகவும் அதிகமானோர் ஆதரவு அளித்துள்ளனர்.

மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் விரைவில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை  ஒரு லட்சத்தை அடைந்து அதைவிடவும் அதிகரிக்கலாமென அச்சம் தெரிவித்துள்ளனர்.   இந்த அச்சம் சென்ற மாத கணக்கெடுப்பிலும் இருந்துள்ளது.  அத்துடன் தற்போது கொரோனா பரிசோதனை போதுமான அளவு நடைபெறாததே இந்த மரணத்துக்குக் காரணம் என 26% பேர் தெரிவித்துள்ளனர்.  அதிக அளவில் பரவ காரணமாக 17% உணவுப் பொருட்கள் மீதும் 18% பேர் சுகாதார நடவடிக்கைகள் மீதும் குறை கூறி உள்ளனர்.

அதிபர் டிரம்பின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்துச் சென்ற மாதம் 48% பேர் எதிரான கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். தற்போது  அது 55% ஆக உயர்ந்துள்ளது.   டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி இட உள்ள நிலையில் இந்த கருத்து அவருடைய வெற்றிக்கு ஒரு சவாலாக அமையும் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.  டிரம்ப் குறித்த கருத்தில் டெமாக்ரடிக் மற்றும் சுயேச்சை ஆகியோர் அதிக அளவிலும் ரிபப்ளிக் கட்சியினர் ஓரளவு மட்டும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது

மரணம் அடைவோர் எண்ணிக்கையை குறைக்க அரசு எடுத்து வரும நடவடிக்கைகள் மோசமாக உள்ளதாக டெமாக்ரடிக் கட்சியில் 82% குறை கூறி உள்ளனர். அதே வேளையில் 80% ரிபப்ளிக் கட்சியினர் அரசின் நடவடிக்கைகள் நன்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  அதைப் போல் ரிபப்ளிக் கட்சியினரில் 84% பேர் கொரோனாவை டிரம்ப் அடியோடு ஒழித்து விடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மோசமாக உள்ளதாகவே பெரும்பான்மையோர் தெரிவித்துள்ளனர்.