வாஷிங்டன்

ந்திய நாட்டுக் கடற்படைக்கு 102 கோடி டாலருக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது

                                                மாதிரி புகைப்படம்

அமெரிக்காவின் நட்பு நாடுகளான துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் எஸ்400 ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் அமெரிக்கா அதிருப்தி அடைந்தது.   சமீபத்தில், ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்காதீர்கள் எனவும் தங்களிடமே வாங்கலாம் எனவும் அமெரிக்கா தெரிவித்தது.

இது குறித்து அமெரிக்க ராணுவ விவகாரங்கள் துறையின் துணைச் செயலாளர் கிளார்க் கூப்பர், “போட்டியாளர்கள் ஆயுத விற்பனை மற்றும் பாதுகாப்பு உதவிகளைச் செய்வதன் மூலம் உலக அளவில் தங்கள் தாக்கத்தை நிலைநாட்ட முயன்று அமெரிக்காவைப் பலவீனப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  இந்தியா 5 இன்ச் அளவில் 13 எம்.கே. 45 (MK 45) துப்பாக்கிகளை வாங்க விருப்பம் தெரிவித்ததாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறி உள்ளது.   அத்துடன்  3,500 ஏவுகணை வெடி மருந்துகள் உட்பட மேலும் சில வெடி பொருட்களையும் உதிரிப் பாகங்களையும் வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கிறது.

இத்தகைய எம் கே 45 ரகத் துப்பாக்கிகள் அமெரிக்காவுக்கு நெருக்கமான கூட்டாளிகளாக உள்ள ஜப்பான், தென் கொரியா, துருக்கி போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளன.

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி அமெரிக்காவின் பென்டகனின் கீழ் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் இந்தியாவுக்குக் கடற்படை பயன்பாட்டுக்கான துப்பாக்கிகளை விற்பனை செய்வது குறித்த பரிந்துரையை அந்நாட்டுக் காங்கிரஸ் வசம் சமர்ப்பித்தது.

அமெரிக்க அரசு இந்த விற்பனை வாய்ப்பு குறித்து ஆராய்ந்த பிறகு இந்தியாவுக்குக் கடற்படை பயன்பாட்டுக்கான துப்பாக்கிகளையும் பிற உபகரணங்களையும் விற்கலாம் என முடிவு செய்துள்ளது.   அமெரிக்கா இதன் மூலம் 102.10 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய உள்ளது.