பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தினமும் அழைப்பு : ஈரான் அதிபர் தகவல்
தெஹ்ரான்
ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தினமும் அழைப்பு விடுத்து வருவதாக ஈரானிய அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது. அத்துடன் ஈரானுக்கு கடும் பொருளாதார தடையை அறிவித்த அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என வற்புறுத்தியது.
அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்த தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த இரு முனை பேச்சு வார்த்தையின் போது ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது குறித்து இந்தியா கேட்டதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் ஈரானிய அதிபர் ஹசன் ரவுகானி செய்தியாளர்களிடம், “ஒரு புறம் ஈரானிய மக்களுக்கு அமெரிக்கா அழுத்தத்தை அளித்து வருகிறது. மறுபுறம் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தினந்தோறும் அழைப்பு விடுத்து வருகிறது.
அவர்கள் எங்களை இந்த இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தலாம், அங்கு பேச்சு வார்த்தை நடத்தலாம் என சொல்கிறார்கள். நாங்களும் பிரச்னைகளை தீர்க்க தயாராக உள்ளோம். ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதற்கு எதிராக உள்ளன.”என தெரிவித்துள்ளார்.