வாஷிங்டன்: ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் துணை, அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்றால் அவர்களுக்கு ஹெச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா வைத்திருப்போர் அங்கு நிரந்தர குடியுரிமையை பெற முடியாது.

3 ஆண்டுகள் வரை இந்த விசாக்காலமாகும். அதற்கு பிறகு, தேவைப்பட்டால் 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இந்த விசா மூலம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களும், சீனர்களும் அதிகளவில் பணி புரிகின்றனர்.

அதனால், அதிபர் டிரம்ப் அமெரிக்கர்களுக்கு வேலை என்ற முழக்கத்தை கையில் எடுக்க, ஹெச் 1 பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

அண்மையில் கூட, ஹெச் 1 பி விசா விண்ணப்பங்களை தொடக்க நிலையிலேயே நிராகரிக்கும் சதவீதம் அதிகமாக இருந்தது. இந் நிலையில், விசா வைத்திருப்போரின் துணை (கணவன் அல்லது மனைவி) அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கப்படும் விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர், அந்த வழக்கை கீழமை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

தொடக்கத்தில் இருந்த இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். அதன்பிறகு அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கப்படும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

இதன்மூலம், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் துணை, அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இடைக்கால நிவாரணம் கிடைத்திருக்கிறது. மறு ஆணை வரும் வரை, ஹெச் 1 பி  விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணியாற்றலாம்.