நியூயார்க்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில் ஒரு பெருந் தொகையை நிரவ்மோடி தனது ‘பயர்ஸ்டார் டைமண்ட்’ நிறுவனத்திலும், அதன் சார்புடைய நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள திவால் நீதிமன்றத்தில் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் அதை திரும்ப பெற வசூல் நடவடிக்கையை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் அதை வசூல் செய்ய எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முடியாது. போன், இமெயில் மூலமும் கடன் தொகையை கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை மீறினால் அபராதம், சேதங்களுக்கு தண்டனை, வக்கீல்கள் கட்டணம் ஆகியவற்றை செலுத்த நேரிடும். மேலும் வரும் 30ம் தேதி இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களின் கூட்டத்திற்கு நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.