”பயங்கரவாதிகள் அமைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” – பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்

தனது நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

america

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. அதன்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனது நாட்டு எல்லைக்குள் இந்திய நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நேற்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

இதேபோன்று பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தேன். எனவே, இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்து இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு கொண்டு வர வேண்டுமென இருநாடுகளின் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளேன் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் நிலவ வேண்டுமென பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி