ஷாங்காய் :

 

கொரோனா வைரஸ் தொற்று உலகையே வாயை மூடி மவுனமாக உட்காரவைத்திருக்கும் வேலையில் ஓசையில்லாமல் பல்வேறு சம்பவங்கள் உலக அரங்கில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

உலகையே அச்சத்தில் உறையவைத்து வலம்வந்து கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கியபோதும், பந்தயத்தில் ஓடும் குதிரையாக சட்டென எழுந்து நின்ற சீனா, தற்போது மருத்துவ உபகரணங்களை பல்வேறு நாடுகளுக்கு விற்று வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற நிலைமையை சமாளிக்க சீனாவின் உதவியை  நாடி இருக்கும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் உள்ளது.

சீனாவில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் பிரான்சுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை அந்த நிறுவனங்களுடன் பேசி பிரான்ஸ் தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தைவிட மூன்று மடங்கு பணம் தந்து அமெரிக்கா இந்த சரக்குகளை அள்ளிச்சென்றது என்று தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது உயிரிழப்புகளும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில், தேவையை சமாளிக்க சீனாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் இறக்குமதியான பொருட்களை, அதிக விலைகொடுத்து வாங்கி குவித்துவருகிறது அமெரிக்கா.

ஒருபக்கம் வந்தவரை லாபம் என்று சீனாவும், மறுபுறம் கிடைத்தவரை லாபம் என்று அமெரிக்காவும் ஓசையில்லாமல் செய்துவரும் இந்த வியாபாரத்தால் உலகின் வேறு சில வல்லரசுகளே திணறும் போது, வளரும் நாடுகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.