தொலைவிலிருந்து பணிசெய்யும் ஊழியர்கள் – புதிய ஊதியக் கொள்கையை வகுக்கும் ஐடி நிறுவனங்கள்!

சாண்டியகோ: ‍அமெரிக்காவின் சில ஐடி நிறுவனங்கள், நிரந்தரமாக வேறு இடங்களில் தங்கி பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை திட்டமிட்டு வருகிறது.

அந்தவகையில், ‍அமெரிக்காவின் செலவு மிகுந்த சிலிக்கன் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள நிறுவனங்கள், அலுவலகம் வராமல், தொலைவில் தங்கியே நிரந்தரமாகப் பணியாற்ற விரும்புவோரின் ஊதியத்தில்18% அளவிற்கு குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. VMware Inc. உள்ளிட்ட சில நிறுவனங்களின் பெயர்கள் இதில் பலமாக அடிபடுகின்றன.

மேற்குறிப்பிட்ட நிறுவனம், முகநூல் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, அதன்மூலம் தனது ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர், நேரடியாக அலுவலகம் வராமல், நிரந்தரமாக தொலைவிலிருந்தே பணிசெய்யும் வாய்ப்பை வழங்குவதற்கு உத்தேசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொலைவிலிருந்து பணிசெய்ய விரும்பும் ஊழியர்களின் ஆண்டு ஊதியத்தில் 8% அளவிற்கு பிடிக்கப்படலாம் என்றும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற நிறுவனங்களும், இத்தகைய வாய்ப்பை தங்கள் பணியாளர்களுக்கு வழங்கி, அவர்களுக்கான புதிய ஊதிய விகிதத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.