வாஷிங்டன்

ங்கிலம் அல்லாத அமெரிக்க மருத்துவர்களிடையே ஸ்பானிஷ் மொழிக்கு அடுத்தபடியாக இந்தி அதிகம் பேசப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டாக்ஸிமிட்டி என்னும் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடையே அவர்கள் பேசும் மொழி குறித்து ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளது.  அது தனது கணக்கெடுப்பின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

”அமெரிக்காவில் உள்ள 9,50,000 மருத்துவர்களில் சுமார் 1,00,000 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.  அவர்களில் சுமார் 70% பேர் இந்தியாவில் கல்வி பயின்று அமெரிக்கா வந்தவர்கள்.   இந்தியாவில் இருந்து வந்துள்ள மருத்துவர்களில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசுபவர்கள்.   ஆங்கிலம் அல்லாத மற்ற மருத்துவர்களிடையே அதிகம் பேசும் மொழி ஸ்பானிஷ்.  அதற்கு அடுத்தபடியாக இந்தி மொழி இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஸ்பானிஷ் 36.2% மருத்துவர்களாலும், இந்தி 13.8% மருத்துவர்களாலும் பேசப்படுகிறது.  அடுத்தடுத்த இடங்களில் பிரெஞ்ச் 8.8% பேராலும் பாரசீகம் 7.6% பேராலும் சீனமொழி 5.2% பேராலும் பேசப்படுகிறது “ என உள்ளது.

அந்த கணக்கெடுப்பில் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் மூன்று பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா,  உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப்,  தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என பிரிக்கப்பட்டுள்ளனர்.    இந்தியாவில் இருந்து வந்துள்ள மருத்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தி மொழியை பயின்றதால் அதே மொழியில் அவர்கள் பேசுவதாகவும் கூறுகிறது.

ஆனால் அங்குள்ள இந்தியர்கள் இதை மறுத்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் ஷா என்னும் மருத்துவர், “இந்தி பயின்ற மருத்துவர்களிடையேயும் இந்தி பேசும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.  இந்திய மருத்துவர்களில் பலர் இந்திய மொழிகளில் பேசுவதில்லை.   எனக்கு தெரிந்து சுமார் 5% மருத்துவர்கள் மட்டுமே இந்தி மற்றும் உள்ள இந்திய மொழிகளில் பேசிக் கொள்கிறோம்.  என் குடும்பத்திலேயே எனது குழந்தைகள் நான் குஜராத்தி அல்லது இந்தியில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதில் அளிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.