அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததால், பறிபோகும் வேலைவாய்ப்பு

இந்த கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் தினக்கூலிகள், சாலையோரவாசிகள், ஆதரவற்றோர், மாத சம்பளத்தினர் போன்ற நடுத்தரவாசிகள் மட்டுமல்ல.  வெளிநாடுகளில் டாலர்களில் புரளும் ஐடி ஊழியர்களும் தான்.

ஆம்.  ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்காவில் பணிபுரிவோர், குடும்ப விழா, விடுமுறை மற்றும் விசா கால நீடிப்பு என்று பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த மார்ச்சில் இந்தியா வந்தவர்கள், இன்று திரும்பிச்செல்ல வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

டல்லாஸில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் எரிகா முகர்ஜி, தனது H1B விசா காலநீட்டிப்பு பெற வந்தவர் இன்று தனது வேலையையே இழந்து விடும் அபாயத்தில் இருக்கிறாராம்.

“மார்ச்ல இந்தியா வந்த நான் விசால ஸ்டாம்ப் வாங்கிட்டு கிளம்புற நேரத்தில பிளைட் எல்லாம் கேன்சல் ஆகிடிச்சு.  இங்கிருந்தே ஆன்லைனில் பணி புரியவும் முடியாத நிலை. ஏன்னா அதுக்கான எந்த ஏற்பாட்டோடும் வரல.  நான் பார்த்திட்டிருந்த புராஜக்ட்டும் இப்போ என் கைவிட்டு போயிடிச்சு.  இங்க நெட் கனெக்‌ஷன் வேற மோசமா இருக்கிறதால மீட்டிங் அட்டன் பண்றது கூட கஷ்டமா இருக்கு.  என் முயற்சி எல்லாம் வீணாகிப்போய் ஒரு சில ஆபீஸ் மீட்டிங் கூட கலந்துக்க முடியாத நிலைல இருக்கேன்.  நான் போய் தான் வீட்டு வாடகை, லோன் EMI இதெல்லாம் கட்டணும். என்ன செய்றதுன்னே தெர்ல” என்று புலம்புகிறார்.

கணவர் சான்டியாகோவில் இருக்க,  குழந்தையுடன் இங்கே மாட்டிக்கொண்ட அக்‌ஷயா விஸ்வநாத், “நான் அங்க மாஸ்டர் டிகிரி படிச்சிட்டு இருக்கேன்.  ஏற்கெனவே இங்க மாட்டிக்கிட்டதால ஒரு சில இன்டர்ன்ஷிப் வாய்ப்புக்களை இழந்துட்டேன்.  நிறைய கம்பெனிகளிலிருந்து வேலைக்கான ஆபர்ஸ் வருது.  ஆனா நான் இங்க சென்னைல மாட்டிக்கிட்டேன்னு தெரிஞ்சதும் அவங்க அப்படியே பின் வாங்கிட்டாங்க.  டெல்லிவரை கூட போக முடியாம பெரும் சிக்கலில் இருக்கேன் நான்” என்று தன் நிலை பற்றிப் புலம்புகிறார்.

இங்கே இந்தியாவில் சிக்கிக்கொண்ட இந்த என்ஆர்ஐ அனைவரும் ஒன்று சேர்ந்து ஆன்லைனில் ஒரு குரூப் ஆரம்பித்து அதன் மூலம் தங்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கும் உதவி கேட்டு மனு செய்துள்ளனர்.  அதில், “எங்களில் பெரும்பாலானோர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  நிறைய பேர் சம்பளமில்லா விடுமுறையில் தான் வந்திருக்கிறோம்.  கையிருப்பும் கரைந்து வரும் இந்த சூழலில் வீட்டு வாடகை, கார் லோன், பெர்சனல் லோன், கல்விக்கடன் என்று திருப்பிச்செலுத்த வேண்டிய நிலுவைகள் மிகப்பெரிய பிரச்னைகளாக மாறிவருவதுடன் எங்களின் குடும்பங்களை பிரிந்து கடந்த இரண்டு மாதங்களாக இங்கே சிக்கித் தவித்து வருகிறோம்.  எனவே தகுந்த நடவடிக்கைகள் மூலம் எங்களுக்கு உதவ வேண்டுகிறோம்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்க துாதரக அலுவலகமும் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து அவசர உதவிகள் கூடப் பெற முடியாத நிலையில் தவித்து வருகின்றனர் இவர்கள்.

– லெட்சுமி பிரியா