ஹூஸ்டன் :
மெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூட வேண்டும் என அமெரிக்க அரசு செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டு உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது முதல் பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க சீன உறவில் முட்டல் மோதலாக இருப்பதாக உலகம் முழுக்க முணுமுணுக்கப்பட்டது, இந்நிலையில் அமெரிக்காவின் இந்த உத்தரவு இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை உண்டாக்கியிருக்கிறது.
சீன தூதரக அதிகாரிகள் அமெரிக்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கடந்த சில மாதங்களாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள இந்த தூதரகம் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சீனாவிற்கான முதல் தூதரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடியாக ஹாங்காங்-கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முடக்க சீனா திட்டமிட்டிருப்பதாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாகவே சீன தூதரக அதிகாரிகளை அமெரிக்கா மிரட்டி வருவதாகவும், அவர்களுக்கு கொலை மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும். தூதரகத்திற்கு அனுப்பப்படும் பைகளை சோதனை என்ற பெயரில் திறந்து பார்ப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இடைமறிப்பது ஊடுருவல் செய்வது போன்ற எண்ணம் தங்கள் ரத்தத்தில் கிடையாது, குறைந்த அவகாசத்தில் தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது அமெரிக்காவின் அடாவடித்தனத்தையே காட்டுகிறது என்றும் சீனா கூறியிருக்கிறது.
இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரக அலுவலக திறந்த வெளி கூடத்தில் சீன தூதரக அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கட்டுக்கட்டாக எரிப்பதை படம் பிடித்த அமெரிக்க காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர், இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அது தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீன தரப்பு, இத்தனை அமெரிக்க அதிகாரிகளுக்கு முன் எரிக்கப்பட்ட ஆவணங்கள் எப்படி சர்ச்சைக்குரியதாக இருக்கமுடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறது.
2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகத்தையும், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூட ரஷ்யாவிற்கு அமெரிக்கா உத்தரவிட்ட பிறகு டிரம்ப் நிர்வாகம் எடுத்திருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை இது தான் என்று கூறப்படுகிறது.