மறைந்த கருணாநிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்திற்கு திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

karunanithi

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களிலும் ஒருவரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு. கருணாநிதி இம்மாதம் 7 ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரின் மறைவிற்கு பல தலைவர்களும், பொதுமக்களும், பிரமுகர்களும், அஞ்சலி செலுத்தினர். இலங்கை உட்பட பல நாடுகள் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தின.

இந்நிலையில் கருணாநிதி மறைவை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி கே டெவிஸ் ஆகஸ்ட் 24ம் தேதி கொண்டு வந்திருக்கிறார். அதில், “ அமெரிக்க வாழ் தமிழர்கள் பலர், சிறந்த நபரைப்பற்றி எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். ஜூன் 3, 1924ம் ஆண்டு பிறந்த கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி 2018ம் ஆண்டு மறைந்தார். சமூக வாழ்விற்காக 14 வயதில் இருந்து தன்னை அர்பணித்து கொண்டவர். தனது 14வது வயதில் முரசொலி என்ற பத்திரிகையில் எழுத தொடங்கிய இவர் 92 வயது வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.

தமிழ் மொழியில் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திகையாளர் , நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர் என்று பன்முக தன்மையுடன் விளங்கியவர். அவர் எழுதிய புத்தகங்கள் பல லட்சக்கணக்கில் விற்றுத்தீர்த்துள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் அரசியலில் தோல்வியை கண்டிராத தலைவராக இருந்திருக்கிறார். தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்துள்ளார். சாதி ஒழிப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் கருணாநிதி “ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு திமுக சார்பில் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.