வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருவது குறித்து அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் எலிசபெத் வாரன் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் மக்களின் உரிமைகளை இந்திய அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

“அமெரிக்க – இந்திய கூட்டுறவு என்பது பரஸ்பரம் பகிரப்படும் ஜனநாயக மதிப்பீடுகளின் அடிபப்டையானது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது மற்றும் இதர அடக்குமுறைகள் காஷ்மீரில் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறித்து நான் மிகவும் கவலைக் கொள்கிறேன். அப்பிராந்திய மக்களின் உரிமைகள் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.

மசாச்சுசெட்ஸ் செனட்டரான இவரின் இந்தக் கருத்துக்கு முன்னதாகவே, மற்றொரு முக்கிய அமெரிக்க அரசியல்வாதியும் காஷ்மீர் குறித்து கவலைத் தெரிவித்திருந்தார். அதே ஜனநாயகக் கட்சியைத் சேர்ந்த பெர்னி சான்டர்ஸ்தான் அவர். காஷ்மீர் விஷயத்தில் ஐ.நா.மன்றத்தின் தீர்மானம் மற்றும் விதிமுறைகளின்படி தீர்வுகாணப்பட வேண்டுமென அமெரிக்க அரசு இந்தியாவை வலியுறுத்த வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், “காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து நான் மிகவும் கவலை கொள்கிறேன். அங்கே இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார் அவர்.