அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் : முதல் பலியை அறிவித்த டிரம்ப்

வாஷிங்டன்

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 69 பேர் தாக்கப்பட்டுள்ள நிலையில் முதல் உயிரிழப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா நாடு முழுவதும் பரவியது.  அத்துடன் அந்த வைரஸ் தாக்குதல் உலகிலுள்ள 60 நாடுகளில் பரவி உள்ளது கண்டறியப்பட்டது.   அதிகாரப் பூர்வ  அறிவிப்பின்படி உலகெங்கும் உள்ள 60 நாடுகளில் இந்த வைரசால்   85406 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  2924 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கொரோனா வைரஸ் குறித்து அவசரநிலை பிரகடனம் செய்துள்ள நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் வேகமாக பரவுவது மக்களிடையே பீதியை அளித்துள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்க நாட்டிலும் ஏற்பட்டுள்ளது.   அமெரிக்காவில் இதுவரை 69 பேர் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.  அவர் தனது உரையில் அமெரிக்காவில் தற்போது 22 நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது” என அறிவித்துள்ளார்.

அதிபர் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும் அமெரிக்க ஊடகங்கள் சுமார் 69 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன.