இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்! பிரதமர் மோடி வரவேற்பு

அகமதாபாத்:

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானி டிரம்ப் மற்றும் அதிகாரிகளுடன் இந்தியா வந்தடைந்தார்.  தனது முதல் பயணத்தின்போது தலைநகர் டில்லியில் கால் பதிக்காமல் முதன்முதலாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதற்காக இன்று முற்பகல் சரியாக 11.30 மணி அளவில் அவரது விமானம் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தது.

விமானத்தில் இருந்து டிரம்ப் தம்பதிகள் சரியாக 11.55 மணி அளவில் தரையிறங்கினர். டிரம்புக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவர்களை பிரதமர் மோடி உள்பட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். டிரம்பை பிரதமர் மோடி எப்போதும்போல கட்டியணைத்து வரவேற்றார்.  விமான நிலையத்தில் அவர்களுக்கு  பாரம்பரிய முறைப்படி மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிரம்பின் இந்திய விஜயத்தில், டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் உள்பட முக்கிய உயர் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.