புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

trump

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பாகிஸ்தானிற்கு எதிராக போராட்டங்களில் சிலர் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த இந்திய அரசு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரியை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வர்த்தக ரீதியாக மிகவும் வேண்டத்தக்க நாடு என்ற அந்தஸ்தையும் பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா திரும்ப பெற்றது.

இதுமட்டுமின்றி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு எதிராக உலக நாடுகள் பலவும் தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் தருவதையும், நிதியுதவி அளிப்பதையும் தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், “ தற்போது காஷ்மீரில் நிலவும் சூழல் மிகுந்த ஆபத்தாக மாறி உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் 50 வீரர்கள் வரை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தன்னை காத்துக் கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது .

இந்தியா – பாகிஸ்தானிடையே நிலவும் பதற்றதை குறைக்க முயற்சிக்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இருநாடுகளுக்கிடையே ஏற்படும் சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இனிமேலும் இது தொடராமல் நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும் என அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசாகர் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.