வாஷிங்டன் :

திபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் ஜனவரி 6 ம் தேதி நாடாளுமன்றத்தை தாக்கியதை தொடர்ந்து, இன்று நடக்க இருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இவர்கள் வன்முறை நிகழ்த்த கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிடம், வெள்ளை மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 25000 தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர், பாதுகாப்பு படை வீரர்களில் உள்ள டிரம்ப் ஆதரவு வீரர்கள் மூலம் கலகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சிய உளவுத்துறையினர், இவர்கள் அனைவரின் தரவுகளையும் கடந்த சில நாட்களாக அலசி ஆராய்ந்தது.

இதில், 12 வீரர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்தது, இதில் பத்து பேர் மீது ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதும், ஒருவர் வலது சாரி சிந்தனையாளர் என்பதும், மற்றொருவர் டிரம்ப் ஆதரவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய தேசிய பாதுகாப்பு படை தலைவர் ஜெனரல் வில்லியம் வாக்கர், “தகுதியான ஆட்கள் பாதுகாப்பு பணியில் இருப்பதை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை” என்று கூறினார்.