வாஷிங்டன்: டிஜிட்டல் நாணயங்களில் ஒன்றான கிரிப்டோகரன்சி என்பது பணமே அல்ல என்றும், அத்தகைய டிஜிட்டல் வணிகத்தில் ஈடுபடுவோர், அமெரிக்க மற்றும் சர்வதேச வங்கி விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

Facebook நிறுவனம் தனக்கான தனி நாணயமாக ‘லிப்ரா’ என்ற டிஜிட்டல் நாணயத்தை அடுத்த 2020ம் ஆண்டு முதல் புழக்கத்தில் கொண்டுவர உள்ளதாக அறிவித்ததையடுத்தே, உலகெங்கிலும், குறிப்பாக வர்த்தக உலகில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

டிரம்ப் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, “நான் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிகளின் ரசிகன் கிடையாது. அவையெல்லாம் பணமே கிடையாது. அவற்றின் மதிப்பிற்கும் பயன்பாட்டிற்கும் எந்த நீடித்த உத்தரவாதமும் இல்லை.

இவையெல்லாம் டிஜிட்டல் நாணயமாக இருப்பதால், இதன்மூலம் நிறைய பித்தலாட்டங்களை செய்ய முடியும். கடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் நடைமுறைக்கு வந்த பின்னர்தான் கிரிப்டோகரன்சிகள் புகழ்பெறத் தொடங்கின.

அமெரிக்கா சார்பாக நாம் ஒரேயொரு உண்மையான நாணயத்தை மட்டுமே வைத்துள்ளோம். அதன் பெயர் அமெரிக்க டாலர். எனவே, இத்தகைய டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தி வணிகத்தில் ஈடுபடுவோர், அமெரிக்க மற்றும் சர்வதேச வங்கி விதிமுறைகளுக்கு கட்டாயம் உட்பட்டு ஆக வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார்.