அமெரிக்க அதிபர் தேர்தல்: செனட் சபையை கைப்பற்ற டிரம்ப், பைடன் கட்சிகள் இடையே கடும் போட்டி…

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுடன் காங்கிரஸ் அவை தேர்தலும் நடைபெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில், செனட் சபைக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அதிபர்  தேர்தலில், குடியரசு கட்சி சார்பில்  தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74)  மீண்டும்  போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ( வயது 77) போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுடன்  காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. அதன் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும்  3ந்தேதி இரவுமுதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அங்கு அதிபர் தேர்லில் வெற்றி 270 வாக்குகள் பெற வேண்டிய நிலையில்,  ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில் கோல்மால் நடைபெறுவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சில மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில்,  அங்குள்ள பிரதிநிதிகள் சபையில் ஜோபைடன் போட்டியிடும் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில், செனட் சபையை கைப்பற்ற  கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில்  மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர்.  காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது. ஒன்று செனட் இன்னொன்று பிரநிதிகள் சபை.  அதாவது காங்கிரசில் உள்ள செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 பிரநிதிகளும் உள்ளனர்.

எந்த அவையில் எந்த கட்சி எவ்வளவு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே, அந்நாட்டில்  சட்டங்களை இயற்ற  மெஜாரிட்டி இருக்க வேண்டும். இதனால் இந்த சபைகளில்  அதிக இடங்களில் வெற்றிபெறுவது அவசியம் ஆகும்.

காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 செனட்டர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரநிதிகள் எண்ணிக்கை மாறுபடும். இந்த நிலையில் தற்போது நடந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் செனட் சபையில் கைப்பற்ற பெரும்பாமைக்கு 51 இடங்கள் தேவைப்படும் நிலையில்,   ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 48 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 48 இடங்களில் வென்றுள்ளது. இதனால், செனட் சபைக்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

செனட் சபை: ஜனநாயக கட்சி 48 இடங்களில் வெற்றி, குடியரசு கட்சி 48 இடங்களில் வெற்றி

பிரதிநிதிகள் சபை: அதுபோல பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் ஜோபைடனின் ஜனநாயக கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டிரம்பின்  குடியரசு கட்சி 190 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், பிரதிநிதிகள் சபையில் பைடன் கட்சி பெரும்பாடன்மை பெறுவது உறுதியாகி உள்ளது.