வாஷிங்டன்

மெரிக்கப் பங்குச் சந்தையில் இருந்து சீன நிறுவனங்களை நீக்கம் செய்யும் தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே இருந்து வந்த வர்த்தகப் போர் ஒரு முடிவுக்கு வராமல் இருந்து வந்தது.  இந்நிலையில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் அமெரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  இதுவரை 16.21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரவி உள்ள கொரோனாவால் சுமார் 96000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா இது குறித்து சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டதாகவும் தெரிவித்தது.  அதையொட்டி அந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்த முடிவு செய்தது.  மேலும் கொரோனா வைரஸ்  குறித்து சீனாவில் சோதனை நடத்த அமெரிக்கா முற்பட்ட போது அதைச் சீனா தடுத்தது.

சீனாவில் உள்ள தனது முதலீடுகளை அமெரிக்கா குறைத்துக் கொள்ள தொடக்கியது  சீனாவில் அமெரிக்க பென்ஷன் நிதி முதலீடுகளாக இருந்த பல நூறு கோடி டாலர்கள் நிதியை அமெரிக்க அரசு திரும்பப் பெற்றது.   அதுமட்டுமின்றி அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் பதிவு செய்ததையும் நீக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.   குறிப்பாக நியூயார்க் பங்குச் சந்தை பட்டியலில் அலிபாபா போன்ற சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் காட்டுவதைப் போல் பங்குச் சந்தையில் தங்கள் வருமான கணக்குகளைக் காட்டுவதில்லை எனப் புகார் எழுந்தது. இதை கரணம் காட்டி அமெரிக்க செனட் சபை ரிபப்ளிக் கட்சி  உறுப்பினர் ஜான் கென்னடி மற்றும் டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் கிறிஸ் வான் ஹாலன் ஆகியோர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் இருந்து சீன நிறுவனங்களை நீக்கம் செய்ய ஒரு மசோதாவைக் கொண்டு வந்தனர்.

இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  அத்துடன் ஏற்கனவே பென்ஷன் நிதி முதலீடுகளைச் சீனாவில் இருந்து திரும்பப் பெறுவதற்கும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த புதிய மசோதாவின்படி வெளிநாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களும் அமெரிக்கப் பங்குச் சந்தையால் மூன்று வருடங்களுக்கு மேல் கணக்கு தணிக்கை செய்யப்படாத நிறுவனங்களும் நீக்கப்படும்.