வாஷிங்டன்: இந்தியாவுக்கு  2வதுமுறையாக மேலும் 100 வென்டிலேட்டர்கள் மற்றும் கொரோனா மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம்  அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு கொரோனா நோயாளிகளின் பராமரிப்புக்காக  அமெரிக்கா 100 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்தது. தற்போது மேலும் 100 வென்டிலேட்டர்களை அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னட் ஜெஸ்டர் வெளியிட்டுள்ள தகவலில்,  இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிக்கும் வகையில 200 வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கெனவே 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் வழங்கி உள்ளோம். தற்போது  2-வது கட்டமாக 100 வென்டி லேட்டர்கள் இன்று வழங்கப்பட்டன.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  இந்த வென்டிலேட்டர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவானது, இதை எந்த இடத்திலும் பொருத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும். இந்தியாவில் மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்த இந்தியஅரசுடன் இணைந்து அமெரிக்காவும் பங்களிப்பு செய்து வருகிறது. குறிப்பாக வென்டிலேட்டர்கள் வழங்குதல், பயிற்சி, கிளினிக்கல் பயிற்சி போன்றவற்றை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.