கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஐஐடி-மும்பையில் படித்துவந்தனர் இருவர். ஆனால், அவர்களில் ஒருவர் தலித் என்பதை, மற்றொரு உயர்சாதி மாணவர் கண்டுபிடித்தார். பொது மெரிட் பட்டியலில், தனது சகமாணவரின் பெயர் இடம்பெறாததை பார்த்த பின்னர், அந்த மேல்சாதிக்கார மாணவர், தன் சக மாணவரின் ஜாதி குறித்த உண்மையைக் கண்டுபிடித்தார்.
அதாவது, அந்தப் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில், இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தியே நுழைந்துள்ளார் தனது சக மாணவர் என்பதை அவர் அறிந்தார்.
அடுத்த 10 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள மல்டிநேஷனல் நிறுவனமான ‘சிஸ்கோ’ வில் இருவரும் பணியில் சேர்கின்றனர். ஆனால், அப்போதும் தனது சக மாணவர் ஒரு தலித் என்பதை, மற்றொரு ஆதிக்க சாதி மாணவர் தன் மனதில் ஆழமாக பதிய வைத்திருந்தார்.
இந்த விபரத்தை, தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் மத்தியிலும் அவர் பகிர்ந்தார். அந்த உயர்சாதி மாணவரின் பெயர்தான் தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா அரசின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தர் ஐயர். இவருடன் சேர்ந்து ரமணா கொம்பெல்லா மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனமான சிஸ்கோவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதாவது, சட்டவிரோதமான வேலை நடைமுறைகளை பின்பற்றியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு எந்த நேரத்தில் வெளியாகியுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தற்போது அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்து, அதுதொடர்பான விழிப்புணர்வு மீண்டெழுந்துள்ள சூழலில், இந்த ஜாதிய பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளதானது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவிலிருந்து, அமெரிக்கா சென்று பணியாற்றும் பல தலித்துகள், தங்களுடன் பணிசெய்யும் சக உயர்ஜாதி இந்துக்கள், ஜாதிப் பாகுபாடுகளைப் பின்பற்றும் அதேநேரத்தில், வெளியில் பகட்டிற்காக நிறவெறிக்கு எதிரானப் போராட்டத்தை ஆதரிப்பதை குறிப்பிடுகின்றனர்.
அதேசமயம், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களிடையே ஜாதிப் பாகுபாடு நிலவும் சூழல் புதிதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அங்குள்ள சட்டத்தின்படி, ஜாதிப் பாகுபாடு என்பது ஒரு சட்டப்பூர்வ குற்றமல்ல என்பதால், அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த முக்கியப் பிரச்சினையை அலட்சியம் செய்து விடுகின்றன.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் வழங்கப்படும் வேலை வழங்கலுக்கான கடிதங்களில்(Offer Letters), நிறம் மற்றும் மதத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடு அனுமதிக்கப்படாது என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்குமே தவிர, அதில் ஜாதி என்பது குறிப்பிடப்பட்டிருக்காது என்கின்றனர் ஜாதியப் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டவர்கள். (ஜாதி என்பது இந்திய இந்து சமூகத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு இழிவான கருத்தாக்கம்).
ஏனெனில், இந்தக் கடித வடிவமைப்பு என்பது, உலகின் அனைத்து நாட்டுக் குடிமக்களுக்குமானது. அப்படி இருக்கையில், இந்தியாவிற்கு மட்டுமே உரித்தான ஜாதி என்பது அதில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லைதான்! இதில் என்ன ஒரு கூத்து என்றால், அமெரிக்காவில் செயல்படும் இந்தியர்களின் நிறுவனங்கள் வழங்கும் Offer கடிதங்களில்கூட, ஜாதி என்ற விஷயம் குறிப்பிடப்படுவதில்லை.
இந்நிலையில், தற்போது கலிஃபோர்னிய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கின் மூலம், ஜாதிப் பாகுபாட்டை அலட்சியம் செய்யும் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஜாதியப் பாகுபாட்டிற்கு எதிரான எந்தவொரு குறிப்பிட்ட சட்டப்பிரிவும் இல்லையென்றாலும், தற்போது கலிஃபோர்னிய அரசால் சிஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கானது, அமெரிக்காவின் வரலாற்றுப் புகழ்மிக்க சிவில் உரிமைகள் சட்டத்தின் அடிப்படையிலேயே தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், கடந்த 1960ம் ஆண்டுகளில் அமெரிக்க கருப்பின மக்கள், நிறவெறிக்கு எதிராக நிகழ்த்தியப் போராட்டங்களால் உருவானதாகும்!
இந்த சிவில் உரிமைகள் சட்டத்தின் பிரிவு VII ஐ, சிஸ்கோ நிறுவனம் மீறியுள்ளதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கலிஃபோர்னிய மாகாணத்தின் நியாயமான வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுவசதி சட்டத்தையும் அந்நிறுவனத்தின் செயல்பாடு மீறிவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. சிஸ்கோ நிறுவனத்தின் செயல்பாடு, உள்நோக்கம் கொண்டது, தீங்கானது, மோசடியானது மற்றும் அடக்குமுறை வாய்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் 90% இந்தியர்கள் உயர்சாதியினர்தான் என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஸ்கோ நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட தலித், முற்றிலும் உயர் ஜாதியினர் நிரம்பிய அணியில், தனி ஒருவராக சிக்கிக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சிஸ்கோ நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் சட்டங்களை தீர்க்கமான முறையில் மதித்து நடப்பதாகவும், பணியாளர்களின் குறைகள் மீது தனி அக்கறை செலுத்தப்படுவதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிப் பாகுபாட்டினால் பாதிக்கப்பட்ட தலித்திடம், அவரின் வேறு 2 சக ஊழியர்கள், “நீங்கள் என்ன ஜாதியை சேர்ந்தவர் என்பதை, மேற்பார்வையாளர் சுந்தர் ஐயர் எங்களிடம் தெரிவித்திருக்கிறார். நீங்கள் இடஒதுக்கீட்டின் மூலம்தான் ஐஐடி -யில் இடம்பிடித்தீர்கள் என்றும் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்ததும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் மீதான ஜாதியப் புறக்கணிப்பு தொடர்பாக, சிஸ்கோ நிறுவனத்தின் மனிதவளத் துறைக்கு பாதிக்கப்பட்ட நபர் புகாரளித்த ஒரு வாரத்தில், இந்த சுந்தர் ஐயர் என்பவர், பாதிக்கப்பட்ட தலித்தின் பணிக் குழுவிலிருந்து ஆட்களை நீக்கி, அவரைத் தனிப்பட்ட பங்களிப்பாளர் என்ற நிலைக்கு தள்ளியதுடன், அவருடைய பணியின் முக்கியத்துவத்தையும் குறைத்திருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்த ஒரு முஸ்லீம் தொடர்பாகவும், பாரபட்சமான கருத்துகளை தெரிவித்ததாக சுந்தர் ஐயர் மீது புகார் உள்ளது!
ஒரு தலித்தின் ஜாதிய அடையாளம் மட்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுவிட்டால், அது உயர்ஜாதியினரின் பின்னிப் பிணைந்த நெட்வொர்க்கில் விரைவாகப் பரவிவிடும் என்பதுதான் தலித் மக்களின் கூற்று.
சுந்தர் ஐயர் மற்றும் பாதிக்கப்பட்ட தலித் ஆகியோருடன் ஒரே ஐஐடியில் படித்த சமீர் என்பவர், ஜான்‍ டோ(பாதிக்கப்பட்ட தலித்), தான் படிக்கும் காலத்தில் என்னவிதமான புறக்கணிப்பிற்கு உள்ளானாரோ, அத்தகையப் புறக்கணிப்பிற்குத்தான் இப்போது பணிசெய்யும் இடத்திலும் உள்ளாகிறார் என்றுள்ளார்.
மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள், பணிக்கான புதிய ஆட்களை, ஏற்கனவே அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்களின் பரிந்துரையின் பேரிலேயே தேர்வு செய்கின்றன. இதன்மூலம், அந்த நிறுவனங்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் உயர்ஜாதி இந்துக்கள், தாங்கள் சார்ந்தவர்களையே பரிந்துரைக்கின்றனர்.
இதன்மூலம், தலித்துகளுக்கான வாய்ப்புகள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன. மேலும், தலித்துகள் தவிர, கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
தற்போது, ‍அமெரிக்க சமூகத்தில், ஜாதியும் ஒரு பிரச்சினையாக பார்க்கப்படும் சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிலையை, அங்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை மேற்கொண்டுவரும் சாதி இந்திய சமூகம் கவனித்து வருகிறது.
இந்நிலையால், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவளத்துறை(HR) நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டிய நேரமிது!
 
நன்றி: த வயர்