அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்..!

--

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடிய வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்திற்கு, விண்வெளி விபத்தில் மரணித்த இந்தியாவின் கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா சார்பாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த 2003ம் ஆண்டு, விண்வெளியிலிருந்து திரும்புகையில், அமெரிக்க விண்கலம் வெடித்து சிதறியதால், தனது குழுவினருடன் மரணமடைந்தார் இந்தியாவின் கல்பனா சாவ்லா.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம், தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு ‘எஸ்எஸ் கல்பனா சாவ்லா’ எனப் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; நாசாவுக்குச் சென்ற இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு இன்று நாங்கள் மரியாதை செலுத்தியிருக்கிறோம். மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா அளித்த பங்களிப்பு நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். எங்களின் அடுத்த என்ஜி-14 சைக்னஸ் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டுவதில் நார்த்ராப் க்ரூம்மேன் நிறுவனம் பெருமையடைகிறது. மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு மரியாதை அளிப்பது எங்கள் நிறுவனத்தின் பாரம்பரிய வழக்கம்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்து, முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற கல்பனா சாவ்லா வரலாற்றில் இடம்பிடித்தவர் என்பதால் அவரின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. விண்வெளித் திட்டங்களுக்காக தனது உயிரையே இழந்துள்ளார் கல்பனா. அவரின் மரபு, வழிகாட்டல் எதிர்கால விண்வெளி வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.