கொரோனா வைரஸ் எதிரொலி : அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

நியூயார்க்

கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருவதால் அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து தங்கம் விலை கடுமையாக  உயர்ந்துள்ளது.

மாதிரி புகைப்படம்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது.  சீனாவைத் தவிரத் தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன. இதைப் போல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளிலும் பலர் பாதிக்கபட்டுள்ளனர்.

சீனாவில் தற்போது இந்த வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும் மற்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது.   இதனால் வர்த்தகம்  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.    உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த பல நிறுவனப் பங்குகள் மதிப்பு குறைந்து வருகின்றன.

கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவுக்கு டவ் ஜோன்ஸ் பங்குகள் நேற்று ஒரே நாளில் 1000 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.   இதைப் போல் தொழில்நுட்ப நிறுவனமான நஸ்டாக் 3.71 % சரிந்துள்ளது.  நேற்றைய அமெரிக்கப்  பங்குச் சந்தை விவரப்படி டவ் ஜோன்ஸ் 1031.61 புள்ளிகள் அதாவது 3.58% சரிவைச் சந்தித்துள்ளது.  இதே நிலை ஆப்பிள் நிறுவனத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த பங்குச் சந்தை சரிவு காரணமாக உலகச் சந்தையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து  வருகிறது.    தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிப்பதால் இந்நிலை உள்ளதாக மூத்த சந்தை நிபுணர் மார்க் லுஸ்சின்சி தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கொரோனா வைரஸ் தொற்று குறையும் வரை பங்குச் சந்தை சரிவில் இருந்து மீள்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.