வாஷிங்டன்

மெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ராண்ட் பால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த ஒரு மசோதா கொண்டு வர உள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்காவின் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தை வளர்த்ததாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டினார்.   இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது நிலையை விரைவில் அமெரிக்காவுக்கு விளக்க உள்ளதாக அறிவித்தது.    சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதில் அளித்தது.    அதே நேரத்தில் அமெரிக்க  அதிபர் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலரும் பாக் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

அமெரிக்காவின் செனட்டர் (பாராளுமன்ற உறுப்பினர்) களில் ஒருவரான ராண்ட் பால் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அவர் தனது அறிக்கையில், “அமெரிக்காவின் கொடியை எரிக்கும்,   அமெரிக்கா ஒழிக என கோஷமிடும் நடுகளுக்கு இனி அமெரிக்கா உதவாது.  அப்படிப் பட்ட நாடான பாகிஸ்தானுக்கு  கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா $ 33 பில்லியன் நிதி உதவியை அளித்துள்ளது.    ஆனால் நமக்கு என்ன கிடைத்தது?   ஒசாமா பின் லாடன் அதே நாட்டில் தங்கி இருந்த போதும் அவரைப் பிடிக்க பாக் உதவவில்லை.   அது மட்டுமின்றி அவரை பிடிக்க உதவியவரையும் பாக் சிறையில் அடைத்தது.  மேலும், சந்தேகத்துக்குரிய பல பயங்கரவாதிகளை பாக் தனது நாட்டில் அனுமதித்துள்ளது.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட எண்ணியதால் நான் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வர உள்ளேன்.   அந்த மசோதா அமெரிக்கா இதுவரை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ள பணத்தை திரும்பப் பெறவும் இனி ஏதும் நிதி உதவி செய்வதை தடுக்கவும் வகை செய்யும்.    இனி அந்தப் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் சாலைகள், பாலங்கள் அமைப்பது போன்ற பணிகள் செய்ய முடியும். இனியாவது அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொண்டு இது போல நாடுகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.