வந்தே பாரதம் சிறப்பு விமான சேவை நியாயமற்ற செயல் : இந்தியாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன்

ந்தியா ஏற்பாடு செய்துள்ள வந்தே பாரதம் சிறப்பு விமானச் சேவை நியாயமற்ற செயல் எனக்  கூறிய அமெரிக்க அரசு அவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதனால் இந்தியாவுக்கு வரும் சர்வதேச விமானச் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.   ஆனால் பல இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.  அவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர இந்திய அரசு வந்தே பாரதம் என்னும் சிறப்பு விமானச் சேவைகள் ஏற்பாடு செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வந்தே பாரதம் விமானச் சேவைக்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   இது குறித்து அமெரிக்கப் போக்குவரத்துத்  துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்ல ஏர் இந்தியா மூலம் இந்திய அரசு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.   இது இலவச சேவை இல்லை.

இதற்குப் பொதுமக்களிடம் இருந்து ஏர் இந்தியா கட்டணம் வசூலிக்கிறது.  ஆனால் அமெரிக்க விமானங்களை இந்தியாவுக்கு இயக்க அரசு தடை விதித்துள்ளது.   கட்டணம் வசூலிக்கும் போது இது வர்த்தகம் எனவே பொருள் கொள்ள முடியும்.  அதனால்  இந்த சிறப்பு விமானங்கள் போட்டி நிறுவனங்களுக்கு எதிராக இயங்கி வருகின்றன. இவை நியாயமற்ற செயல்கள் ஆகும்.

அத்துடன் இந்தியர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்கள் பயணிகள் போக்குவரத்துடன் வேறு பல வணிக ரீதியான போக்குவரத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.  இது அமெரிக்க விமானச் சேவை கட்டுப்பாடுகளை மீறிய செயலாகும்.   இந்தியா அமெரிக்காவில் சிறப்பு விமானங்களை இயக்க இனி அமெரிக்கா போக்குவரத்துத் துறையின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.