வாஷிங்டன்: சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 5% வரியை அதிகரித்துள்ளது அந்நாடு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், சீனாவிலிருந்து வரும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. அப்பொருட்களுக்கு தற்போது 25% வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 15% வரி விதிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் அவை 10% வரிவிதிப்புக்கு உள்ளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால், பாதிப்பு அந்நாட்டிற்கானதாகவே இருந்தபோதிலும், வணிக யுத்தத்தில் தோற்றுவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இருநாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தகப் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், சீனாவுக்கு அடுத்து, டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வல்லமை வாய்ந்த ஒரே நாடு இந்தியாதான் என்றும் கூறப்படுகிறது.