12 வயதானோருக்கான பிஃபிஸர் கொரொனா தடுப்பூசி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஒப்புதல்

வாஷிங்டன்

பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இங்கு பிஃபிஸர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்படுகின்றன.  இதில் பிஃபிஸர் நிறுவனம் ஜெர்மனியின் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியது,

இவ்விரு நிறுவன மருந்துகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவில் 27 நாடுகளிலும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தப்படுகின்றன.   பிஃபிஸர் நிறுவனம் புதியதாக 12 வயது முதல் 15 வயதுக்குட்படோருக்கான புதிய தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்துள்ளது.  இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் பிஃபிஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்த மருந்துக்கு அடுத்த வாரம் திங்கள் அன்று ஒப்புதல் அளிக்கப்படும் என நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.   கடந்த மார்ச் மாதம் இந்த மருந்து சோதனைகள் முடிந்து பாதுகாப்பானது என சான்றுரைக்கப்பட்டதாகும்.   இவ்வாறு அனுமதி கிடைத்தால் அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்.

இந்தியாவில் தற்போது மே மாதம் முதல் 18 – 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் போதிய மருந்து இல்லாததால் இதுவரை பல இடங்களில் பணிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.