நியூயார்க்: அமெரிக்காவில் ஒரேநாளில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 77000 என்ற அளவிற்கு பெரியளவில் அதிகரித்ததோடு மட்டுமின்றி, ஒரேநாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் 1000 வரை அதிகரித்துள்ளது.
ஒருநாளில் இறப்போர் எண்ணிக்கை 969 என்பதாக அதிகரிப்பதானது, ஜூன் 10 தொடங்கி, பெரிய எண்ணிக்கையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 16ம் தேதி, அந்நாட்டின் ஃபிளாரிடா, தெற்கு கரோலினா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள், கொரோனா தொடர்பான அதிக உச்சத்தை எட்டின.
தற்போதுவரை, அந்நாட்டில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 138000 என்பதாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது அதிகரித்துவரும் மரண மற்றும் தொற்று எண்ணிக்கை, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டெக்சாஸ் மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்களில், நிலைமை கைமீறிப் போவதால், அங்கு இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான இடம்கூட கிடைக்காமல், அம்மாநில நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரலில், ஒரு நாளைக்கு 2000 வரை நிகழ்ந்த கொரோனா மரணங்கள், ஜூன் மாதம் 800 என்பதாக குறைந்து, தற்போது ஜூலையில் மீண்டும் 1000ஐ நெருங்குகிறது.