வாஷிங்டன்: தொழிலாளர்களை சிரமப்படுத்தியும் பலவந்தப்படுத்தியும் வேலை வாங்கப்படுவதாகக் கூறி, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 5 பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனத்தவர் வசிக்கின்றனர். இங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மையினர முகாம்களில் அடைத்து, பொருட்கள் தயாரிப்பில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக சீன அரசு மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உற்பத்தியை அதிகரிக்க, சீன அரசு, தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில், தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, நவீன அடிமை முறை என அமெரிக்கா விமர்சித்தது.

இந்நிலையில், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்து, உற்பத்தி செய்யப்படும் சீன பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்க, அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக, பருத்தி, தக்காளி, கணினி உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீனப் பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா தடை விதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.