சக ஒட்டப்பந்தய வீரரால் ஒலிம்பிக் தங்கத்தை பறிகொடுத்தார் போல்ட்

உலகின் மின்னல் வேக மனிதரும், ஜமைக்கா ஓட்டப் பந்தய வீரருமான உசேன் போல்ட் சக வீரரால் ஒலிம்பிக்கில் வென்ற 9 தங்கப் பதக்கங்களில் ஒன்றை பறிகொடுத்துள்ளார்.

2008-ம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் ஆடவர் 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். போல்ட் அணியில் இடம் பெற்றிருந்த நெஸ்டா கார்ட்டர் என்ற வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது. இதைதொடர்ந்து ஜமைக்கா அணியின் தங்கப் பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) பறித்துள்ளது.

ஜமைக்கா அணியில் நெஸ்டர், போல்ட் தவிர, ஆசாபா பாவெல், மைக்கேல் பிரேட்டர் ஆகிய 4 பேர் இடம்பெற்றிருந்தனர். ஊக்கமருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதைதொடர்ந்து 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலங்களில் 458 வீரர்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் நவீன தொழில்நுட்பம் மூலம் மறு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் கார்ட்டர் தடை செய்யப்பட்ட மெத்தில் ஹெக்ஸானியாமைன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 2008, 2012, 2016ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட போல்ட் 100, 200 மற்றும் 4*100 மீ தொடர் ஓட்ட பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்றார்.

மொத்தம் 9 தங்கப் பதக்கங்களை போல்ட் வென்றிருந்தார். இதில் ஒரு தங்கப் பதக்கத்தை தற்போது பறிகொடுத்துள்ளார். இதன் மூலம் “டிரிப்பிள் -டிரிப்பிள்’ (3 ஒலிம்பிக்கிலும் தலா மூன்று தங்கம் வென்றவர்) என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார்.

ஜமைக்கா அணியின் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டதை தொடர்ந்து, 2008ம் ஆண்டிஇல் வெள்ளி பதக்கம் வென்ற டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி தங்கப் பதக்கமும், வெண்கல பதக்கம் வென்ற ஜப்பான் அணி வெள்ளிப் பதக்கமும், 4-வது இடத்தைப் பிடித்த பிரேசில் அணி வெண்கலப் பதக்கமும் வென்றதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.