உசிலம்பட்டி முன்னாள் கம்யூனிஸ்டு எம்எல்ஏ சந்தானம் காலமானார்

சென்னை:

சிலம்பட்டி பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்தானம் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பார்வர்ட் பிளாக் கட்சி மூத்த தலைவருமான  சந்தானம் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று  வந்த நிலையில் காலமானார்.  அவருடைய உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கொள்கைகளால் கவரப்பட்ட சந்தானம் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். திமுக, அதிமுக என்று கூட்டணி கொள்கைகளை அவ்வப்போது மாற்றியபோதும் இந்த இரு பெரும் கட்சி தலைவர்களின் அன்புக்குரியவராக சந்தானம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தின்  மனைவி அன்னம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு பாலகிருஷ்ணன், இளங்கோவன், சுப்பிரமணி ஆகிய 3 மகன்களும், சரோஜினிதேவி என்ற மகளும் உள்ளனர். சந்தானம் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.