தேர்தலில் கருப்புப் பணம் உபயோகம் அதிகரிப்பு : முன்னாள் தேர்தல் ஆணையர்

 

டில்லி

தேர்தலில் கருப்புப்பணம் உபயோகிப்பது அதிகரிப்பதாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரைஷி கவலை தெரிவித்துள்ளார்.

குரைஷி என சுருக்கமாக அழைக்கப்படும் ஷகாபுதின் யாகுப் குரைஷி கடந்த 2010 ஆம் வருடம் ஜூலை முதல் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர்.   அவர் விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் செயலராகவும் பதிவி வகித்துள்ளார்.   அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2012 ஆம் வருடம் ஜூன் மாதம் வரை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்தார்.  இவர் பல புத்தகங்கள் எழுதி புகழ் பெற்றவர் ஆவார்.

சமிபத்தில் இவர் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, “அனைத்து தொகுதி வாக்குகளையும் சேர்த்து எண்ணுவது நல்ல யோசனை ஆகும்.   மின்னணு வாக்களிப்பு  இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் முன்பு அப்படித்தான் வாக்கு எண்ணப்பட்டது.   அதன் மூலம் கட்சிகளுக்கு எந்தெந்த பகுதிகளில் தங்களுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தன என்பது தெரியாமல் இருக்கும்.   அனைத்து மக்களையும் கட்சிகள் சமமாக கருதும்.

ரூ.20000 க்கு மேல் தேர்தல் நிதி அளிப்போர் பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என இருந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.    கோடிக்கணக்கில் கட்சிகளுக்கு நிதி கிடைக்கிறது.   ஆனால்  அது குறித்த விவரங்கள் யாருக்கும் தெரிவதில்லை.  கடந்த 70 வருடமாக இருந்த அரசியல் கட்சிகளின் நிதியில்  இருந்த வெளிப்படைத்தன்மை தற்போது அடியோடு மறைந்து விட்டது.

தேர்தல் சமயத்தில் கருப்புப் பணம் உபயோகிப்பதை இதற்கு முன்பு எளிதாக கண்டறிய முடிந்தது.    தேர்தல் செலவுகளைக் கண்காணித்து பல இடங்களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை கைப்பற்றி உள்ளோம்.   ஆனால் இப்போது நிலைமை மோசமாக உள்ளது.    முன் எப்போதையும் விட தேர்தலில் கருப்புப் பண உபயோகம் அதிகரித்துள்ளது “ என குரைஷி தெரிவித்துள்ளார்.