டில்லி:

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்துவைக்கப்பட்ட இந்தியப் பெண் உஸ்மா, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில் இந்தியா வருவார் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

உஸ்மா – தாஹிர்

இந்தியாவை சேர்ந்தவர் உஸ்மா (வயது 20). இவர் மலேசியா சென்று இருந்தபோது  அங்கு, பாகிஸ்தானை சேர்ந்த தஹிர் அலி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் காதல் அரும்பியது.

பிறகு தஹிர் அலி தன் நாடான பாகிஸ்தானுக்கும், உஸ்மா இந்தியாவுக்கும் திரும்பினர். இந்த நிலையில் தாஹிரை திருமணம் செய்துகொள்வதற்காக கடந்த மே மாதம், உஸ்மா பாகிஸ்தான் சென்றார்.

அங்கு சென்ற பிறகுதான் தாஹிருக்கு ஏற்கெனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதிர்ந்துபோன உஸ்மா, திருமணத்துக்கு மறுத்தார். ஆனால் தாஹிரும் அவரது உறவினர்களும் துப்பாக்கி முனையில் உஸ்மாவை மிரட்டி திருமணத்தை நடத்தி முடித்தனர்.

தாஹிர் குடும்பத்தினருக்குத் தெரியாமல் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரத்துக்கு தப்பி வந்தார் உஸ்மா. துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருணம் செய்துவைத்ததையும் தெரிவித்தார். தன்னை இந்தியாவுக்கு அனுப்பும்படியும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் தாஹிர் அலி, உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்திய தூதரகம் தன்னுடைய மனைவியை சிறைபிடித்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்த புகார் குறித்து விசாரித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, “உஸ்மா இந்தியாவிற்கு திரும்பவே இந்திய தூதரகத்தை நாடிஉள்ளார்” என்று தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று டில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாக்லே இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர், “பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் உஸ்மா பத்திரமாக உள்ளார். அவர் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக அந்நாட்டுடன் தொடர்பில் இருக்கிறோம். விரைவில் உஸ்மா இந்தியா வருவார்” என்று தெரிவித்தார்.