டெஹ்ராடூன்: வேளாண் பயிர்களுக்கு ரசாயன உரம் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், ஓராண்டு சிறையில் அடைக்கவும் சட்டம் இயற்ற உத்ரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறுவதாவது; நவீன அறிவியலுடன் பாரம்பரிய அறிவை இணைப்பதும் முக்கியம். அது எங்களின் இலக்கும்கூட. எனவே, இதன்பொருட்டு, வேளாண் நிலங்களில் ரசாயன பூச்சிக்கொல்லிப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் புதிய விவசாய சட்டத்தை இயற்றவுள்ளோம்.

இதன்மூலம் வருங்காலத்தில் உத்ரகாண்ட் விவசாயம் 100% இயற்கையானதாக மாற்றப்படும். முதற்கட்டமாக மாநிலத்தில் 8 பிராந்தியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டம் இயற்றப்படவுள்ளது. இச்சம் சட்டமன்றத்தின் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் இயற்றப்படவுள்ளது.

ஆரோக்கியத்திற்கு எதிரான அபாயங்களைக் குறைப்பதற்காகவும், நமது மாநிலத்தின் வேளாண் பொருட்களை நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்தும் வகையிலும் அந்த சட்டம் அமையும்” என்றார் அவர்.