உ.பி.யில் தொடரும் கொடுமை: மேலும் ஒரு பாஜ எம்எல்ஏ மகன்மீது இளம்பெண் பாலியல் புகார்

லக்னோ:

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த  எம்.எல் ஏவின் மகன், தன்னை  பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர்  ஷாஜகான்பூர் கலெக்டர் அலுவகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

உ.பி.மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதியஜனதா அரசு பதவி ஏற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைதூக்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா அமைப்பினரால் இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற உன்னாவ் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அது தொடர்பாக உ.பி. பாஜக  எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் மீது  பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

அதுபோல கிராமத்து இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது  குழந்தையின் எதிரிலேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நிகழ்வும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  தற்போது மற்றொரு பாஜக எம்எல்ஏவின் மகன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

தனது புகாரின்மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, தனக்கு நீதி வேண்டும் என்று கூறி, தனது தந்தையுடன்  ஷாஜகான்பூர் கலெக்டர் அலுவகம் முன் இன்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நீடித்து வருகிறது.