லக்னோ:

உ.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு அதிகாரிகள் அலுவலகங்களில் குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களை தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள நாற்காலிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டது. அவர் பயன்படுத்தும் சோபாவின் மீதுள்ள துண்டுகளும் காவி வர்ணத்திலேயே இடம்பெற்றன. இந்நிலையில் உ.பி. மாநில தலைமை செயலகத்திற்கும் காவி வர்ணம் பூசப்படுகிறது.

தலைமை செயலக கட்டிடத்திற்கு காவி வர்ணம் பூசப்படுவது பற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ இதில் தவறேதும் இல்லை. இந்த வர்ணம் கவரும் வகையில் இருந்தது. அதனால் தேர்வு செய்யப்பட்டது’’ என்றனர். முந்தைய சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் அகிலேஷ் யாதவினால் பள்ளி குழந்தைகளுக்கு சிவப்பு அல்லது பச்சை வர்ண பைகள் வழங்கப்பட்டன.

யோகி ஆட்சிக்கு வந்த பின் அவை காவி வர்ணத்தில் வழங்கப்படுகின்றன. கடந்த செப்டம்பர் 25ம் தேதி தீன் தயாள் உபாத்யாயா பெயரில் காவி வர்ணத்தில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.