Random image

உத்திரப் பிரதேசம் : தலித் தலைவர் மீதான குண்டர் தடை சட்டம் நீக்கம்

கரன்பூர்

கரன்பூர் பகுதியில் சாதிக் கலவரத்தில்கைது செய்யப்பட்ட பீம் படை தொண்டர் சந்திரசேகர் மீதான குண்டர் தடை சட்டத்தை உ.பி. அரசு நீக்கி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் சகரன்பூர் பகுதியில் பீம் படை என்னும் பெயரில் ஒரு தலித் அமைப்பு தொடங்கி நடத்தி வருபவர் சந்திரசேகர்.    கடந்த 2017 ஆம் வருடம் மே மாதம் 5 ஆம் தேதி அன்று சகரன்பூர் பகுதியில் மகாராணா பிரதாப் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு பேரணி நடைபெற்றது.   அப்போது தலித்துகளுக்கும் உயர்சாதியினரான தாகுர்களுக்கும் இடையில் பெரும் கலவரம் மூண்டது.

அதை கண்டித்து அதே வருடம் மே 23 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மற்றொரு பேரணி நடத்தினார்.    அப்போது மீண்டும் கலவரம் வெடித்தது.  இத கலவரத்தில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார்.   இதை ஒட்டி தலித் வகுப்பை சேர்ந்த பீம் படை தலைவர் சந்திர சேகர் மற்றும் 3 தாக்குர் சமூக இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிறகு இவர்கள் அனைவர் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி அரசு சிறையில் அடைந்தது.   இந்த சட்டத்தை எதிர்த்து தாகுர் சமூக இளைஞர்கள் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.   அதை ஒட்டி இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை விலக்கிய உயர்நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது.

சந்திரசேகரின் தாய் இந்த தீர்ப்பை காரணம் காட்டி தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.  அந்த கோரிக்கையை ஏற்ற அரசு சந்திரசேகர் மீதான குண்டர் தடை  சட்டத்தை நீக்கி உள்ளது.   இந்த உத்தரவு சாகரன்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சந்திரசேகரை விடுதலை செய்ய உத்தரவிடுவார் எனவும் அரசின் உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.