த்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மிதானியா என்ற கிராமம், அங்குள்ள புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது. அந்த சரணாலயத்தில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை, மிதானியா கிராமத்தில் கரை ஒதுங்கியது.

பின்னர் மழை நீரில் நீந்தி சென்று ஊர் குட்டையில் அடைக்கலம் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் முதலில் பீதி அடைந்தனர்.

முதலை தங்கள் ஊருக்குள் புகுந்துள்ளது பற்றி வன அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் அந்த கிராமத்துக்கு வந்து சேர்வதற்குள் இருட்டி விட்டதால், முதலையை பிடிக்காமல் சென்று விட்டனர்.

முதலை இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழைந்து விட்டால் என்ன செய்வது? என்று அஞ்சிய கிராமத்தினர், முதலையை உயிரோடு பிடித்துள்ளனர். மறுநாள் வன அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு வந்துள்ளனர்.

முதலையை தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்த ஊர் மக்கள், ’’உயிரை பணயம் வைத்து முதலையை பிடித்துள்ளோம். 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் முதலையை ஒப்படைப்போம்’ என அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், முதலையை வன அலுவலர்களிடம் ஒப்படைக்காவிட்டால், வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.

இதனால், வேறு வழி இல்லாமல் முதலையை, வன அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

-பா.பாரதி.